முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம்செய்யப்படாத தமிழ்மக்களின் பூர்வீக வாழிடங்களான ஏ.சிபாம் கிராமத்திற்கும், தண்ணிமுறிப்புக் கிராமத்திற்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (15.05.2025) களவிஜயம் மேற்கொண்டு, குறித்த பகுதிகளைச்சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
அத்தோடு வீமன்கமம் பகுதியில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் விவசாயக் காணிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது பார்வையிட்டார்.
இதன்போது ஏ.சி.பாம், தண்ணிமுறிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களின் பூர்வீகவாழ்விடங்களில் அப்பகுதிக்குரிய தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதுதொடர்பிலும், வீமன்கமம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் விவசாய நிலங்களை விடுவிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்தோடு ஏ.சி.பாம், தண்ணிமுறிப்பு ஆகிய தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் தமிழ்மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பிலும், வீமன்கமம் விவசாயக் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் பாராளுமன்றில் பேசுவதுடன், உரிய தரப்பினருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதன்போது தண்ணிமுறிப்பு, கோணமடுப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.