Video link
https://www.facebook.com/share/v/16nNQgWckv/
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக கரைதுறைபற்று பிரதேசசபைக்கு தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றையதினம் (20.05.2025) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய சூழலிலே தமிழ் தேசிய பரப்பிலே இணைந்து பயணிக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தமிழ் தேசியத்தை வலுப்படுத்த வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்தவாரம் ஓர் ஊடக சந்திப்பை தேர்தலுக்கு பின்னர் நிகழ்த்தியிருந்தேன். அதில் தமிழ் தேசியத்தின்பால் செயற்படக்கூடிய ஒருகாலகட்டத்திலே இந்த தேசத்திலே ஜனநாயக ரீதியாக எங்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது எங்களுடைய போராட்டங்கள் அரச பயங்கரவாதத்தினரால் ஒடுக்கப்பட்டபோது அவற்றிற்கெதிராக பல இயக்கங்கள் போராடியிருந்தது.
அவற்றில் தமிழீழ விடுதலைப்புலி இயக்கமாக இருக்கலாம், ரெலோ இயக்கமாக இருக்கலாம் அல்லது பிளொட் அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக இருக்கலாம் எந்த இயக்கமாக இருந்தாலும் அவர்களுடைய தியாகங்கள் போற்றப்பட வேண்டியவை. தங்களுடைய இளமைக்காலங்களை எம் இனத்திற்காக கொடுக்க துணிந்தவர்களின் தியாகங்கள் எந்தநேரத்திலுமே கேள்விக்கு உட்படுத்தமுடியாத அதியுயர்ந்தவை.
எனக்கு வன்முறை மீது உடன்பாடு கிடையாது. ஆனால் வன்முறை தழுவி எமது விடுதலை பயணத்தை ஒடுக்க முற்பட்டபோது வன்முறையினை கையில் எடுக்கவேண்டிய சூழலிலே பல்வேறு இயக்கங்களில் பல்வேறு இளைஞர்கள் தம் உயிர்களை கொடுத்திருந்தார்கள்.அந்த தியாகங்களை நான் மிகவும் கனதியாக மதிக்கின்றேன்.
என்னுடைய அண்ணன் கூட தமிழீழ விடுதலைபுலி இயக்கத்தில் இருந்து இம் மண்ணிற்காக உயிர்த்தியாகம் செய்திருக்கின்றார். எனவே உயிர் தியாகத்தின் பெறுமதியை நான் நன்கு அறிந்தவன் எனும் வகையில் தமிழர்களின் விடுதலைக்காக தம் உயிர்களை கொடுத்த இயக்கங்கள் எதுவாக இருந்தாலும் உயிர்த்தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவை எனும் அடிப்படையிலே நான் அந்த இயக்கங்களை ஒட்டுக்குழு என்கின்ற பொருள்பட பேசியிருந்தால் அந்த விடயம் ஒரு தவறான புரிதலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால் தமிழ்தேசிய நலனுக்காக இந்த பொதுவெளியிலே பகிரங்க மன்னிப்பு கோருவதோடு இலங்கை தமிழரசுக்கட்சி இறுக்கமான மிக நேர்த்தியான ஒரு தலைமைத்துவத்தினால் வழிநடத்தப்படுகின்றது.
தமிழ் அரசுக்கட்சி ஒரு இறுக்கமான தீர்மானத்தைக் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய மாற்று இயக்கங்கள் அல்லது ஏனைய கட்சிகளை விமர்சிப்பது என்பது இலங்கை தமிழ் அரசுகட்சியை பொறுத்தவரை ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே அந்த கட்சியின் தீர்மானத்தை நான் மீறியிருக்கின்றேன். எனவே இலங்கை தமிழ் அரசுக்கட்சியினுடைய தலைமையிடமும் என்னுடைய வார்த்தை பிரயோகத்தை உளரீதியாக பாதிப்படைந்திருக்ககூடிய சகோதர கட்சிகள்கட்சி அல்லது சகோதர இயக்கத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன். இந்த இனத்தினுடைய விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த அனைத்து கட்சிகளினுடைய போராளிகளையும், இயக்கத்தினுடைய போராளிகளையும் நான் உளமார நேசிக்கிறேன். அனைவரும் ஒற்றுமையாக தமிழ் தேசியத்தின் இருப்பிற்காக நாங்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து பயணிப்போம். என் மேலும் தெரிவித்தார்.
இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச கிளையின் செயலாளருமான பீற்றர் இளஞ்செழியனும் உடனிருந்தார்.