சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம்

பூநகரி பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மீது பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முழங்காவில் பொது சுகாதார பிரிவில் உள்ள முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா பகுதியிலுள்ள 4 உணவகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று கடந்த 04.08.2025 அன்று மேற்காெள்ளப்பட்டிருந்தது..

குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற சுகாதார குறைபாடுகளுடன் மற்றும் உணவு கையாளும் நிலையத்தின் கழிவு நீரினை ஒழுங்குமுறையில் அகற்றாது உணவு மாசடையும் வகையில் திறந்த வெளியில் அகற்றியமை , உயர்ந்த மட்ட சுத்தத்தைப் பேணாமல் அதாவது ஏப்ரன், தொப்பி அணியாமல் உணவினைக் கையாண்டமை., சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை தொற்று ஏற்படும் வகையில் ஒன்றாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, உணவுப் பொருட்களை இலையான் மொய்க்கும் வண்ணம் திறந்த நிலையில் விற்பனைக்கு வெளிக்காட்டி வைத்திருந்தமை, மூடியில்லாத குப்பைத்தொட்டியினை சமையலறை, றொட்டி போடும் இடங்களில் வைத்திருந்தமை, குளிர்சாதனப் பெட்டியில் சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை தொற்று ஏற்படும் வகையில் ஒன்றாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை போன்ற பல்வேறு காரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உணவு பொருட்கள் அழிப்பு செய்யப்பட்டதுடன் நேற்றையதினம் (26.08.2025) கிளிநொச்சி நீதிமன்றில் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது கிளிநொச்சி நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளர்கள் குற்றவாளிகளாக இனங்கண்டு மொத்தமாக 150,000 ரூபா தண்டம் விதித்ததுடன், கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

மேற்பார்வைப் பொதுசுகாதார பரிசோதகர் றெணால்ட், பொது சுகாதார பரிசோதகர்களான மு.ஜெனோயன், தளிர்ராஜ் ,இ. தர்மிகன் ஆகியோரினால் இனங்காணப்பட்ட பிரச்சனைக்கு முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகன் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news