விசுவமடு ம.வி பழைய மாணவியின் ‘அலர்’ யாழ்/ பல்கலையில் வெளியீடு

கிளி/ கண்டாவளையைச் சேர்ந்தவரும், மு/விசுவமடு ம.வியில் உயர்தரம் கற்றவருமாகிய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் கல்வி பயிலும் இளையகவி டிலக்சி எழுதிய ‘அலர்’ எனும் கவிதைநூல் நேற்றையதினம் (12.11.2025) வெளியிடப்பட்டது.

புவியியல் துறைத்தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அழைக்கப்பட்டிருந்தார்.

சிறப்பு விருந்தினராக, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் அவர்களும், கௌரவ விருந்தினராக கவிஞர் இ.த.ஜெயசீலன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மையில் உயிர்நீத்த நூலாசிரியரின் தந்தையாருக்கான சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாயின. வரவேற்புரையினை, மொழியியல் ஆங்கிலத்துறை மாணவி செல்வி வி.திவ்ஜா நிகழ்த்தினார்.

துணைவேந்தர் நூலினை வெளியிட்டுவைக்க, முதற் பிரதியினை கிருபா சாரதி பயிற்சிக்கல்லூரின் உரிமையாளர் திருமதி தனித்தா கிருபாகரன் பெற்றுக்கொண்டார். நூலின் நயவுரையினை, கவிஞர் முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.

சுமார், இரண்டு மணித்தியாலய நிகழ்வாக, மிகவும் சுருக்கமான உரைகளுடன் மேற்படி நிகழ்வு நடந்துள்ளது.

நிகழ்வுகளை, வரலாற்றுத்துறை மாணவன் செல்வன் க.கவிதரன் அழகுபட தொகுத்து வழங்கியிருந்தார். ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையை நூலாசிரியர் வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.

Latest news

Related news