ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

குறித்த நடவடிக்கைகள் கடந்த 7 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பொது சுகாதார பரிசோதகர் எஸ். டிலக்சன் தலைமையிலும், 8 ஆம் திகதி மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் எஸ். நதிருசன் தலைமையிலும் இடம்பெற்றன.

இதன் போது வீட்டு வளவுகளில் நுளம்பு பெருகும் இடங்கள் சோதனை செய்யப்பட்டதில், நுளம்பு குடம்பிகளுடன் கூடிய நுளம்பு பெருகும் இடங்களை வைத்திருந்த 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த 6 பேருக்கு எதிராக நேற்று (12.01.2026) மாங்குளம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதவான், குற்றவாளிகளை எச்சரித்ததுடன், தலா 3,000 ரூபா வீதம் தண்டப்பணம் விதித்து, மொத்தமாக 18,000 ரூபா செலுத்துமாறு தீர்ப்பளித்தார்.

டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீட்டு வளவுகளை சுத்தமாக பராமரித்து, நுளம்பு பெருகும் இடங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.



