“பயணத்தின் நடுவே பல மரணங்களைப் பார்த்தேன், பல இடங்களில் வேதனை தாளாமல் அழுது தீர்த்தேன். பல இடங்களில் வலியால் துடித்தேன். ஆனால், என்னால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் ஒருபோதும் வரவில்லை.”
இது எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுத் திரும்பியுள்ள முதல் தமிழ்நாட்டுப் பெண் முத்தமிழ்செல்வியின் வார்த்தைகள்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவது மலையேற்ற வீரர்களில் பலருக்கும் ஒரு கனவு. அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுத் திரும்பிய முதல் தமிழ்நாட்டுப் பெண்ணாக கடந்த மாதம் சாதனை படைத்தார் முத்தமிழ்செல்வி.
எவரெஸ்ட்டை ஏறுவதற்கு முன்பாக, கடல் மட்டத்திலிருந்து 6,119 மீட்டர் உயரத்தில் இருக்கும் லொபுச்சே என்ற சிகரத்தை அடைய வேண்டும்.
அதை அடைந்துவிட்டுத் திரும்பி வந்த முத்தமிழ்செல்வி, பேஸ் கேம்பில் இருந்து கும்பு ஐஸ்ஃபால் என்ற பகுதியை அடைய வேண்டும். அங்கு கிராவர்ஸ் எனப்படும் மிக ஆபத்தான நிலவியல் அமைப்பு உள்ளது.
செங்குத்தாக, எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழக்கூடிய பனிப்பாறைகள் நிரம்பிய பகுதியான கிராவர்ஸில் பயணிப்பது மிகவும் சவாலானது. அதில் எப்போது வேண்டுமானாலும் தவறி விழவேண்டிய நிலை ஏற்படலாம். ஆகவே அதில் பயணிக்கும்போது துரிதமாகச் செயல்பட வேண்டும்.
இத்தகைய நில அமைப்பில் பயணிப்பதற்கு பாதைகளை வகுக்கும் பணியை நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா இன மக்கள் மேற்கொள்வார்கள். எவரெஸ்ட் சிகரத்திற்கான மலையேற்றத்தில் ஈடுபடும் அனைவருக்கும் பேருதவியாக இருப்பவர்கள் ஷெர்பா வழிகாட்டிகள்தான்.
அப்படி பாதை வகுக்கச் சென்ற ஷெர்பா இனத்தைச் சேர்ந்த மூன்று நபர்களே கும்பு ஐஸ்ஃபால் பகுதியில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறுகிறார் தமிழ்செல்வி.
அவ்வளவு அபாயகரமான பகுதியில் பயணித்த அனுபவத்தைக் கூறியபோது, “எப்போது வேண்டுமானாலும் நாம் நடந்து செல்லும் தரைப் பகுதி உடைந்து விழுந்துவிடலாம் என்ற அச்சத்துடனேயே பயணித்தேன்.
அந்தப் பகுதியில் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமுமே மிகவும் முக்கியமானது. அதிவிரைவாகச் செயல்பட வேண்டிய அதேநேரத்தில், சுதாரிப்புடனும் இருந்தாக வேண்டும்,” என்று கூறினார்.
அதைக் கடந்து எவரெஸ்ட் பயணத்தின் நடுவே இருக்கும் இரண்டாவது முகாமை அடைந்தது முத்தமிழ்செல்வியின் குழு
மலையேற்றத்தின்போது, கடும்பனிப்பொழிவால் கால் பாதங்கள் ரத்த ஓட்டம் நின்று விடும் அளவுக்குப் பாதிக்கப்பட்ட கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சந்தித்துள்ளார் தமிழ்செல்வி.
“தமிழ்! நீங்க சிகரத்தை அடையும் மன உறுதியோடு இருந்தால், நிச்சயம் ஏறிவிட்டுத் திரும்பி உயிருடன் வருவேன் என எனக்கு சத்தியம் செய்யுங்கள்,” என்று அவர் தன்னிடம் கேட்டதாகக் கூறுகிறார் தமிழ்செல்வி.
மேலும், “ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் உங்கள் குழந்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “தனது குழந்தைகளுக்காக உயிருடன் பாதுகாப்பாகத் திரும்பி வருமாறு மாரியோஸிடம் தான் செய்துகொடுத்த சத்தியம்தான், சடலங்களைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடுமையான பதற்றத்தைத் தணித்துக்கொள்ளவும் தைரியமாக சிகரத்தைத் தொடவும் உதவியதாக,” கூறுகிறார் முத்தமிழ்செல்வி.
“என் குழந்தைகளிடம் கண்டிப்பாகத் திரும்பி வருவேன் என்று கூறிவிட்டு வந்தேன். தமிழ்நாட்டு மக்கள் பலரும் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். நான் பாதுகாப்பாக வந்துவிட வேண்டும் என்று அக்கறையுடன் கூறியிருந்தனர்.”
சிகரத்தைத் தொடுவதற்கான பயணத்தின் ஒவ்வொரு நொடியின்போதும் இவையனைத்தும் தன் முன்னால் வந்துகொண்டே இருந்தன என்று அவர் கூறுகிறார்.
“மரண வலியை எதிர்கொண்ட ஒவ்வொரு தருணத்திலும் என் குழந்தைகளை நினைத்துக்கொண்டே முன்னேறினேன்.”
அந்த நினைவுகளோடு, “வெளிச்சத்தைத் தேடிச் சென்றுகொண்டே இருந்தேன். நான் சிகரத்தைத் தொட்ட நாளின் அதிகாலை வேளையில் 4 மணிக்கே சூரியன் தென்படத் தொடங்கிவிட்டது.
நான் தேடிக்கொண்டிருந்த வெளிச்சம் கிடைத்துவிட்டதைப் போல் உணர்ந்தேன். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறினேன்.
கடுமையாக வீசிக்கொண்டிருந்த காற்று முகத்தில் வேகமாக அடித்து அடித்து முகத்தின் இடது பக்கம் காயமடைந்தது. ஆனால், நான் கைவிடவில்லை. எனக்குக் கடைசியாகக் கிடைத்த வெளிச்சத்தை இறுகப் பற்றிக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தேன்.”
அதற்குப் பிறகு கீழே இறங்கத் தொடங்கிய தமிழ்செல்வி, பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால், கீழே இறங்க முடியாமல் முகாமில் காத்திருந்தார்கள். ஆனால், அவரது ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகிவிட்டது.
அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, “தான் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அழுதுகொண்டிருந்தார்.”
ஆனால், எனக்கு முன்பாக நான் என்னிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்து காப்பாற்றிய ஒருவர் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் படுத்திருந்தார்.
அப்போது ஒருவரால் எப்படி இவ்வளவு அழுதும் உணர்ச்சியே இல்லாமல் இருக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு அடுத்த நாள்தான் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது,” என்கிறார் தமிழ்செல்வி.
பிறகு, அவருடன் வந்த ஷெர்பா இனத்தைச் சேர்ந்த வழிகாட்டி கொண்டு வந்த கூடுதல் சிலிண்டரை பெற்றுக்கொண்டு அவர் கீழே இறங்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் கோமாவில் இருந்த அந்த நபர் உட்பட, பல விதமான மனிதர்களின் வாழ்வைக் கண்முன் கண்ட அவருடைய நினைவுகளில் பலவிதமான உணர்ச்சிகளும் பலவிதமான அனுபவங்களும் ததும்பிக் கொண்டிருந்தன.
இமயத்தின் மிக உயர்ந்த அந்தச் சிகரத்தின்மீது பட்டுத் தெறித்துக் கொண்டிருந்த சூரியனின் ஒளிக்கதிர்கள், அவரது முகத்திற்கு ஒரு புதிய ஒளியைக் கொடுத்து வழியனுப்பி வைத்தது.
இயற்கையின் அரவணைப்பு, அதன் ஆக்ரோஷம், மகிழ்ச்சி, கண்ணீர், மரணங்கள், சடலங்கள், காயங்கள், வலி, வேதனை, அபாயங்கள் அனைத்தையும் கடந்து மே 23ஆம் தேதியன்று தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
“அந்த நாளில் கடைசியாக சிகரத்தைத் தொட்ட நபர் நான் தான். ஆனால் தொட்டுவிட்டேன். தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழ் பெண் முத்தமிழ்செல்வி, இமயத்தின், இந்த பூமியின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட்டுவிட்டேன்.”