தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் அண்மையில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட- தற்போது சுவிற்சர்லாந்தில் வாழும் 33 வயதான ஒருவரே வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தீவு பகுதிகளை பூர்வீகமாக கொண்ட- தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதியொன்றில் வசிக்கும் 24 வயதான யுவதியொருவருக்கும், சுவிற்சர்லாந்து மணமகனுக்கும் மூன்று மாதங்களின் முன்னர் யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது.
திருமணமான ஓரிரு நாட்களிலேயே தமக்குள் தகராறு எழுந்ததாக கணவனின் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவியுடன் தன்னால் இணைந்து வாழ முடியவில்லையென்றும், மனைவி தன்னிச்சையாக செயற்படுவதாகவும், தனக்கு முரணாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணமான ஓரிரு நாட்களின் பின்னர், தனது பெற்றோரின் மனம் நோகும் விதமாக மனைவி செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மனைவி கவர்ச்சியான ஆடைகள் அணிவதாகவும், அது தமிழ் பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்றும், தன்னால் அதை சகிக்க முடியவில்லையென்றும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமது கிராமத்திலுள்ள கோயில் திருவிழாவிற்கு, “ஜன்னல் வைத்த ஜக்கெட்“ அணிந்து வந்ததாகவும், இதனால் தங்களுக்குள் முரண்பாடு அதிகரித்ததாகவும், உறவினர்கள் பலர் இதுபற்றி தன்னிடம் அதிருப்தி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆடை விவகாரத்தில் மனைவியை, கணவன் தாக்கிய விடயமும் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. குறிப்பிட்ட ஆலய திருவிழாவிலன்று, சேலை விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு கணவன் தன்னை தாக்கியதாக மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாய்த்தகராறு முற்றி, கையாலும், பிளாஸ்டிக் பைப்பினாலும் கணவன் தாக்கியது தெரிய வந்துள்ளது.