ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (15.08.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இது சிங்கள பௌத்த நாடு. நான் வடகிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு வருவேன்” என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கூறி இருப்பது பௌத்தத்தின் பெயரால் புத்தனின் போதனைகளை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல நாட்டின் சட்டத்தை மிதித்து, இனவாத மதவாத வன்முறையை தூண்டும் வக்கிர நச்சு வார்த்தை என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் இவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும்.
வடகிழக்கு தமிழர்களின் தாயக பூமி. இப் பூமியை அரச பயங்கரவாதம் மற்றும் இனவாத திணைக்களங்கள் மூலம் மிக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதோடு சிங்கள பௌத்த இனவாதிகளால் வடகிழக்கின் மரபுரிமை சார் இடங்களும், சைவர்களின் வணக்க ஸ்தலங்களும் சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதோடு; தமிழர்களின் பூர்வீக இடங்களில் பௌத்த சின்னங்கள், தூபிகள்,விகாரைகள் அமைப்பதும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தினமும் போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேவின் சில்வாவின் இப் பகிரங்க பயங்கரவாத வார்த்தை மதவாத வன்முறைக்கு வித்திடுவது மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்ய நினைப்பது பௌத்தத்திக்கும் நாட்டிற்கும் கேட்டையே விளைவிக்கும்.
அரசியல் கட்சிகளாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நாடு விழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடிமட்ட சிங்கள பௌத்த மக்களை தூண்டி அவர்களை வீதிக்கு இறக்கி இழிவான அரசியலை தேர்ந்தெடுக்க முயல்கின்றார். இவரது கடந்த கால வாழ்வில் நாட்டின் சட்டத்தையோ கௌரவத்தையோ மதித்தவர் கிடையாது.
இவரைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளும் உள்ளனர். இவர்களும் இனவாத மதவாதத்தை நம்பியே அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். வடகிழக்கிற்கு எதிராக மக்களை தூண்டி விடுவதிலேயே அரசு அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியலில் வாங்குவது நிலையை இது எடுத்துக்காட்டுகின்றது. இவர்களை மன நோயாளிகள் என்றும் குறிப்பிட வேண்டும். விசர் நாய்களுக்கு தண்ணீரை காண்பது போல இவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளும், மரபுரிமைகளும் தெரிகின்றன. இன்றைய பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இவர்கள் தேவையாக உள்ளனர். இதனாலேயே இவர்கள் சுதந்திரமாக திரிய கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். இந்நிலை நீங்காத வரை நாட்டுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனலாம்.
தற்போது சூழ் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான தெற்கின் அரசியல் சூழ்நிலைக்கு முகம் கொடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் தம்மை வலுவாக கட்டமைத்துக் கொள்ளல் வேண்டும். அரசியல் தீர்வு என 13 வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டும் தற்போதைய ஜனாதிபதியின் நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடாது சுய உரிமைக் காக்கும் அரசியலுக்காக ஒன்று பாடல் வேண்டும்.
அரசியல் தீர்வு என பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும் எலும்பு துண்டாக 13 காட்டிக் கொண்டிருப்பதும் அரசியல் லாபங்கள் சலுகைகளுக்காக அவற்றின் பின்னால் ஓடுவதும் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமையப் போவதில்லை.
தற்போது மேவின் சில்வா அவர்களின் கூற்றினை தனி மனித கூற்றாகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கூற்றாகவோ மற்றும் எடுத்து அசமந்த நிலையில் இருந்து விடாது. இதுவே நாட்டை எப்போதும் ஆட்சி செய்யும் பேரினவாதிகளின் நிலை என உணர்ந்து அதற்கு நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் மக்கள் சக்தியை பலப்படுத்தி கூட்டாக எழுந்து நிற்கவும் தமிழ் அரசியல் தலைமைகள் முன் வரல் வேண்டும். சிவில் சமூக அமைப்புகளும் அதற்கு அழுத்தம் கொடுக்க வலுவான சக்தியாக தம்மை வடிவமைத்துக் கொள்ளலும் வேண்டும் என்றார்.