பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து குருந்தூர் மலை பொங்கலை குழப்புகின்ற முயற்சிகள். பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க அனைவரும் முன்வர வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருக்கின்ற குருந்தூர்மலை தமிழர்களுடைய பாரம்பரிய ஒரு பிரதேசம். தொன்று தொட்டு அங்கே வாழும் தமிழ் மக்கள் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திலே பொங்கலை மேற்கொள்ளும் போது இந்துக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொள்வது ஆதி காலம் தொட்டு ஒரு நிகழ்வாக இருந்து கொண்டிருக்கின்றது.
கடந்த சில காலங்களாக அந்த பிரதேசங்களில் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத மக்களால் ஆக்கிரமிப்பிற்கு உரிய நோக்கத்துடன் மேற்கொள்கின்ற இந்த விடயம் வேதனைக்குரியதாக விடயமாக கருதப்படுகின்றது.
குறித்த ஆலயத்திலே ஒரு பொங்கல் நிகழ்வை மேற்கொள்வதற்காக ஆலய நிர்வாகம் மேற்கொண்டிருக்கின்ற அந்த முயற்சிக்கு வன்னியிலே வாழ்கின்ற மக்கள் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் பேசும் மக்கள் அத்தனை பேரும் குறித்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குறித்த பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து அவற்றை குழப்புகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நேரத்தில் ஆலய பரிபாலன சபையினர் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு
இது எங்களுடைய தாயக பிரதேசம் . இப் பிரதேசத்தை பாதுகாப்பது எங்களுடைய கடமை. ஆகவே ஆலய பரிபாலன சபையினர் அரசியலிலோ அல்லது மத விடயத்திலோ சம்பந்தப்படாதவர்கள். நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து கடமைகளை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.