தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22.08.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட போது பெரும்பான்மையினத்தை சேர்ந்த மீனவர்கள் சார்பாக தோன்றிய சட்டத்தரணி அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மன்றுக்கு வழங்கியிருந்தார். அதன்பின்னர் நீதிபதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மீனவர்கள் 46 பேரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,
கடந்த (04.08) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும், பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்களால் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களில் ஒன்பது பேர் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றிருந்தனர்.
இந்நிலையில். பதிவு செய்யப்பட்ட ஹிச்சிராபுரம், தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த மீனவர்களை விசாரணைக்கு என அழைக்கப்பட்ட நிலையில் 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இதனையடுத்து குறித்த வழக்கானது கடந்த 8 ஆம் திகதி நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்போது இன , மத கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் என பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் தடுப்புகாவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடியால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை அவ்வப்போது தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.