மாவட்டத்தின் அபிவிருத்தியை இங்குள்ள வளங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பங்களிப்போடு முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும் என சுயேட்சைக் குழு 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது அந்த மாவட்டத்தில் உள்ள வளங்களை இனங்கண்டு அவற்றை பயன்படுத்தி அந்த மாவட்ட மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்கி முன்னெடுக்கப்படுவது ஆகும். அவ்வாறானதொரு அபிவிருத்தி எமது மாவட்டத்தில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் எமது பிரதேச இளைஞர், யுவதிகள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள். இந்த நிலை மாற்றம் பெற வேண்டும். இதற்கு இந்த தேர்தலை வன்னி மக்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுடன் பேரம் பேசி அதனை இந்த மண்ணில் நடைமுறைப்படுத்த ஆணையை கோருகின்றோம்.
இதற்கு இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வர வேண்டும். அவர்கள் துடிப்புள்ளவர்களாகவும், சிறந்த திட்டங்களை செயற்படுத்தக் கூடியவர்களாகவும், மொழித் தேர்ச்சி மிக்கவர்களாகவும் இருப்பதே எமது சமூகத்திற்கு நல்லது. அவ்வாறானவர்களை எமது வன்னி மக்கள் இனங்கண்டு எமது மண்ணின் இளைஞர், யுவதிகளின் மாற்றத்திற்காக வன்னியின் குரலாக எமது கரங்களை பலப்படுத்தி அதற்கான ஆணையை வழங்க வேண்டும். எம் பின்னே திரண்டு வரும் மக்கள் அந்த ஆணையை வழங்குவார்கள் என நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.