மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அனுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு- கிழக்கு பகுதியிலும் எமது இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது போன்ற ஒரு நிலமை இருக்கிறது. அது உண்மையில் ஒரு மாயை. அரசியல் நோக்கத்திற்காக இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதற்காக சினிமா பாணியில் கருத்துக்களை கூறுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் அவர்களுடைய உண்மை முகம் தெரியும். தமிழ் மக்களுக்காக என்ன தீர்வினை தரப் போகின்றார் என்பதும், தமிழ் மக்களுக்காக என்ன புதிய விதிமுறைகளை உருவாக்கப் போகிறார்கள் என்பதும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும்.
அத்துடன் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை நினைவு கூருகின்ற போது அவர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து தான் அவர்களுடைய நிலைப்பாட்டை அறிய முடியும். மாவீரர் தினத்தை நினைவு கூர அனுமதிப்பார்கள்? என்றார்.