தேர்தல் ஒன்றும் சீசன் வியாபாரம் அல்ல கொழும்பிலிருந்து தேர்தலுக்காக மாத்திரம் வரும் முறையை வன்னியில் மாற்ற வேண்டும் -வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன்

தேர்தலை சீசன் வியாபாரமாக கருதி தேர்தலுக்காக மாத்திரம் கொழும்பில் இருந்து வந்து வேட்பாளர்களாகும் முறைமையை வன்னியில் மாற்ற வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.

மன்னார் வங்காலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் ஒன்றும் சீசன் வியாபாரமாக செய்ய முடியாது. அந்த மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் உணர்ந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளுகின்ற சமூக சிந்தனை கொண்டவர்களே பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மக்கள் பிரதிநிதிகளாகவும் வர வேண்டும். இந்த விடயத்தை மக்கள் மிக தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலர் பணத்தாலும் தங்களது வாகன தொடரணிகளாலும் மக்களை கவர்ந்து விட முடியும் என்கின்ற மாயையோடு வாக்குகளை சிதறடிப்பதற்காக திரிகின்றனர்.

இவ்வாறானவர்கள் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் தேசிய உணர்வுள்ள மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு செல்லவிடாது தடுப்பது மாத்திரமே குறியாக உள்ளனர்.

அதற்கான வெகுமதிகள் அவர்களுக்கு பெரும் பண முதலைகளால் வழங்கப்படுகின்றது.

தேர்தலின் பின்னர் அவர்கள் மீண்டும் கொழும்புக்கே சென்றுவிடுவார்கள். ஆனால் நாங்கள் இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பவர்கள்.

கடந்த மாகாண சபை தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களால் எங்கள் மக்கள் பட்ட துன்பங்களும் எங்கள் தேசிய உணர்வுகள் சிதைக்கப்படுவதற்கான வழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான ஒரு நிலைமை இந்த வன்னி மக்களும் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அனுபவிக்க அனுமதிக்க முடியாது.

எனவே மக்களுக்கான விடுதலைக்காக புறப்பட்ட போராளிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை ஆதரிப்பதன் மூலம் மாத்திரமே மக்களோடு வாழக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுங்கள்

Latest news

Related news