உக்ரைனுக்கு கூடுதல் கவச வாகனங்களை அவுஸ்திரேலியா வழங்க இருக்கிறது,
இதுதொடர்பாக ,110 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குகிறது. அதில் 70 ராணுவ வாகனங்களும், 28M 113 கவச வாகனங்களும் 14 சிறப்பு நடவடிக்கை வாகனங்களும் அடங்கும்.
ரஷ்யத் தாக்குதலிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீசி தெரிவித்துள்ளார்.
கைகொடுக்கும் அவுஸ்திரேலியா
“இந்தக் கூடுதல் ஆதரவு மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ரஷ்யாவின் முறையற்ற செயல், சட்டவிரோத போரை எதிர்த்து உக்ரைன் மக்கள் மிகுந்த துணிச்சலுடன் அலையெனப் பொங்கி எழுந்துள்ளனர். அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவு உக்ரைன் மக்களுக்குக் கைகொடுக்கும்,” என்று அவுஸ்திரேலியத் தலைநகர் கென்பராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு அல்பினேசி கூறினார்.
கடந்த வாரயிறுதியில் ரஷ்ய நகரான ரொஸ்டோவை வாக்னர் துணைப் படை கைப்பற்றி குறுகிய நேரத்துக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அதிகாரத்துக்குச் சவால் விடுக்கும் வகையில் இருந்தது. ஆனால் அப்படை ரொஸ்டோவ் நகரிலிருந்து பின்வாங்கியது.
இந்த நிகழ்வுக்கும் கூடுதல் ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா முன்வந்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அல்பினேசி தெரிவித்துள்ளார்.