உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் எந்தவொரு வைப்புத் தொகைக்கோ அதற்கான வட்டிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டடத் தொகுதியான ‘லக்சியனே மாளிகையை’ மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27.06.2023) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கம்பஹா மாவட்ட மக்களுக்கு வினைத்திறன் மற்றும் முறையான அரச சேவையை வழங்கும் நோக்கில், ஏழு மாடிகளைக் கொண்ட நிர்வாகத் தொகுதிக்காக சுமார் நான்காயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு
அத்துடன் 2022ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் மொத்த அரச கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) 83,700 மில்லியன் டொலர்களாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128.3% ஆகும். 2022ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 41,500 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.6% ஆகும். அப்போது மொத்த உள்நாட்டுக் கடன் தொகை 42,100 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64.6% ஆகும்.
நாட்டின் கடனை மறுசீரமைக்காமல் பேணினால், 2035ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100%இற்கும் அதிகமான அரச கடன் இருக்கும். வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் நாட்டின் கடனை மறுசீரமைக்க ஏற்கனவே உடன்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு, கடன் மறுசீரமைப்பு அவசியமானது மற்றும் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும். எதிர்வரும் 5 வருடங்களில் மாத்திரம் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்படும்.
வங்கி வைப்பாளர்களின் பணம்
அதற்கிணங்க எமது உள்நாட்டு கடன்வழங்குநர்களும் இதற்கு பங்களிக்க வேண்டும். பொது மக்களின் வங்கி வைப்புகளை பாதுகாக்கும் முதன்மை நோக்கத்துடன் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டு உள்ளதுடன், மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அனைத்து வங்கிகளின் வங்கி வைப்பாளர்களையும் பாதுகாப்பது பாரிய பொறுப்பு.
அதற்கமைய, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முறையின்படி வங்கி வைப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வங்கி முறைமை வீழ்ச்சியடையாது. இது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக்கூடிய மறுசீரமைப்பிற்கு வழி வகுக்கும்.
நாட்டின் பொருளாதார மீட்சி, வட்டி விகிதக் குறைப்பு, அரசாங்கம் இலகுவாக மானியங்கள் வழங்க முடிந்தமை, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள கடன் சுமை அடுத்த 10 வருடங்களில் குறைந்து அதன் மூலம் கிடைக்கும் பலன்களை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது இலங்கையில் பெரும் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக் கட்டமைப்பிற்கோ வங்கி வைப்பாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர்கள் கூடும் போதும் அரசியல்வாதிகள் பலரும் வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
வங்கிகளை கொள்ளையடிக்க தயாராகும் அரசாங்கம்
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு என்ற சாக்குப்போக்கில் ஐந்து நாட்களுக்கு வங்கிகளை கொள்ளையடிக்கும் விளையாட்டை விளையாட அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது சில அமைச்சர்கள் எண்ணெய் வரிசை இல்லை, மின்வெட்டு இல்லை, நாடு நன்றாக இயங்குகிறது என்று கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வரலாற்றில் முதன்முறையாக 34 வீதமான மக்கள் குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் போன்றவற்றை விற்பனை செய்துள்ளனர்.
வருமானத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் தனது உடைமைகளை விற்பனைசென்கின்றனர். மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். மாணவர்களுக்கு புத்தகப் பை கிடைக்காது, ஒரு ஜோடி காலணிகள் வாங்க முடியாது தவிக்கின்றனர்.
நாட்டைக் காப்பாற்றச் வேண்டியவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரி, மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், பொருட்களின் விலை ஆகியவற்றால் நாடு ஒடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக பாழாகியிருக்கும் நிலையில், இப்போது அரசாங்கம் “அஸ்வேசும” என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்த திட்டத்தினால் விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை, சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை, ஏனைய நோய்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை என்பன நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், சமூகத்தின் அடிமட்டத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி சமுர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஏமாற்று வேலை ஜனாதிபதி தேர்தல் வரை இழுத்தடிக்கும் வேலை. இது அரசியல் திட்டம் அல்லவா? இதிலிருந்து கிராம அலுவலர்கள் பின்வாங்கியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் வங்கிக் கட்டமைப்பு பாதிக்கப்படும் அபாயம்
இதேவேளை தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தோல்வியா அல்லது சித்தியா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கு தேர்தலை நடத்த வேண்டும். தற்போதைய முன்னேற்றம் தற்காலிகமானதே சர்வதேச கடன்களை மாத்திரம் மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் தற்போது தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் ஊடாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் போது திறைசேரி உண்டியல்களை பெற்றவர்கள், திறைசேரி பிணைமுறியங்களை கொள்வனவு செய்தவர்கள் பாதிக்கப்படுவதுடன், வங்கி கட்டமைப்பு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன நிதி நிலைமையில் பாதிக்கப்படும்.
ஆகவே தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் போது சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக வேண்டும். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவான செயற்திட்டங்களை ஐக்கிய குடியரசு முன்னணி சார்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
இருப்பினும் அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு எமது யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 1000 ரூபாவாகும் டொலரின் பெறுமதி
மேலும், தற்போதைய மதிப்பீட்டின்படி 2048ஆம் ஆண்டளவில் டொலரின் பெறுமதி 1385 ரூபாவாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் வெளியிட்டிருந்த தகவலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2048ஆம் ஆண்டு இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவ்வாறு செய்வதற்கு வருடாந்தம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் 2048ஆம் ஆண்டு ஜனாதிபதி கூறிய இலக்கை எட்டவே முடியாது. அந்த இலக்கை அடைவதற்கு 2048ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் 13205 டொலர்களாக இருக்க வேண்டும்.
ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3% மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.