எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களம் இன்று பிற்பகல் (03.07.2023) விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மேலும், நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.