தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு சந்தேகநபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடுவெல பதில் நீதிவான் ஹேமந்த வெத்தசிங்க, முன்னிலையில் குறித்த 8 சந்தேகநபர்களையும் விசாரணைகளுக்காக நேற்று(08.07.2023) முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்கள் 8 பேரையும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தமது தரப்பு விரும்புவதாக நீதிவானிடம் கேட்டுள்ளனர்.
குறித்த முறைப்பாடுகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு முன்வைக்கப்படும் போது, சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் உட்பட இரு பெண்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறியமுடிகின்றது.