பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு உடனே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக செய்திகள் பலவற்றை பார்த்திருப்போம்.
உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?
இதில் உண்மையில்லை என்பதே உண்மை..! பல்லிகளில் ஒரு சில இனங்களே விஷமுள்ளவை. நம் வீடுகளில் உலவுகிற பல்லிகளுக்குத் துளியும் விஷமில்லை.
இருந்தாலும் இவற்றின் உடலில் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாக்கள் இருக்கச் சாத்தியம் உண்டு.
பல்லி விழுந்த உணவில் இவை கலந்து, அந்த உணவை நஞ்சாக்கிவிடலாம். அப்போது இந்தக் கிருமிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதே போல, பெரும்பாலும் பயத்தாலும், பதற்றத்தாலும் வாந்தி, மயக்கம் ஏற்படுகின்றன.
பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும்வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்து கிடக்கும் பல்லியைப் பார்த்ததும் தான் சாப்பிட்டவருக்குப் பயம் தொற்றும்.
அதிகப்படியான வாந்தியால் ஏற்படும் டிஹைட்ரேஷனால் ( Dehydration) மயக்கம் உண்டாகிறது. இதனால்தான் மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றுவதற்குப் பரிந்துரைக்கிறார்கள். மற்றபடி உயிரிழப்பு என்கிற அளவுக்கு பயப்படத் தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.