சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் (30) இன்றையதினம் மன்னாரில் வடக்கு, கிழக்கை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
அந்தவகையில் மன்னார் – சதோச மனித புதைகுழி வளாகத்திலிருந்து குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகியிருந்தது.
இவ்வாறு ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ந்து மன்னாரில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அடைந்ததும், அதற்கு முன்பும் சிறிது நேரம் கோசம் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை ஆர்ப்பாட்ட பேரணி சென்றடைந்தது.
அங்கு ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஐ.நாவிற்கு கையளிப்பதற்கான அறிக்கை வெளியிட்டதுடன், ஐ.நாவிற்கான மகஜர் மன்னார் மறைமாவட்ட பங்குத் தந்தையர்களான ஜெயபாலன் குருஸ் மற்றும், மர்க்கஸ் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் திருச்செல்வம் பரன்சோதி, முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், முன்னாள் மன்னார் நகரபிதா ஞானப்பிரகாசம் ஜெராட், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரது ஆதரவோடும் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.