ஓம் நமச்சிவாய என்று கூறியது மாத்திரமே தவறு!! சட்டத்தரணி சுகாஸ்!

இலங்கையினுடைய எந்தச்சட்டத்தினையும் மீறாத எட்டு சந்தேகநபர்களான அப்பாவிகள் ஓம் நமச்சிவாய என்று கூறியது மாத்திரமே தவறு என்று சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் இன்று ஆயராகிவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

இலங்கையினுடைய எந்தச்சட்டத்தினையும் மீறாத எட்டு சந்தேகநபர்களான அப்பாவிகள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிசாரின் விசாரணைகள் நிறைவடையாத காரணத்தினால் இந்த வழக்கு எதிர்வருகின்ற செவ்வாய்க்கிழமைக்கு திகதியிடப்பட்டுள்ளது.

பொலிசாரின் அராஜகங்களையும் சந்தேக நபர்களை அவர்கள் தாக்கி காயப்படுத்திய விடயங்களையும் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தோம். இதனால் அவர்களை சட்டவைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்பிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது. அவர்கள் செய்த ஒரேயொரு தவறு ஓம் நமச்சிவாய என்று கூறியது மாத்திரமே. அது குற்றமா என்ற கேள்வியினையும் நாம் எழுப்பியிருந்தோம்.

இந்த வழக்கில் பொலிசாரின் செயற்பாடுகளும் கைதும் தான் சட்டவிரோதமானதே தவிர அவர்கள் எந்தவிதத்திலும் இலங்கை சட்டத்தை மீறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அத்துடன் பொலிசார் கைதுசெய்யப்பட்டபோது ஒரு காரணத்தை சொல்லியிருந்தார்கள் வழக்கிலே மற்றொரு காரணத்தை சொல்லியிருக்கின்றார்கள் இதனால் அனைத்து விசாரணைகளையும் நிறைவடைவதற்காக எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு வழக்கு திகதியிடப்பட்டது.

Latest news

Related news