தமிழ் தேசிய கொள்கையாளர்களும் அரசியல்வாதிகளும் உணராவிடின் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் துண்டாடப்படும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (24.05.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கும் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் காப்பதற்கான போராட்டத்தின் இறுதி யுத்தக் காலப்பகுதியில் இலட்சத்தை தாண்டியோர் பேரினவாத அரசின் கூலி படைகளால் அகோர தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டில் யுத்தமற்ற காலப்பகுதியில் இனவாத வன்முறைகளால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கெல்லாம் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 14 வருடங்களாக நினைவேந்தல் நடாத்தப்பட்டு மே18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் பொது சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடத்தப்பட்டு வருகையில் இவ்வருடம் கிழக்கின் பல இடங்களில் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதோடு தாக்குதலும் நடத்தியுள்ளனர். இது வட கிழக்கு இணைந்த தமிழர் தேச சிந்தனையை தகப்பதற்கான பேரினவாத தாக்குதல் என நாம் அடையாளப்படுத்தி பேரினவாதிகளின் தொடர் வன்முறைகளுக்கு பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதோடு எமது அரசியல் செயற்பாட்டினை திட்டமிட்டவகையில் கூர்மை படுத்தாவிடின் கிழக்கு பேரினவாதிகளின் அடக்கு முறைக்குள் தள்ளப்பட்டு மக்கள் அரசியல் மௌனிக்கப்படுவதோடு வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்கும் பேரினவாத செயற்பாடு முழுமை பெற்றுவிடும் அபாயம் நம் முன்னே உள்ளது.
பல்வேறு விதமான நில ஆக்கிரமிப்பு கிழக்கில் தொடர்வதோடு இனவாத அரசுக்கு காவடி தூக்கும் அரசியல்வாதிகளாலும் கிழக்கு மண் தமிழர் கையில் இருந்து பறிபோய் கொண்டிருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்கும் இனவாத ஆட்சியாளர் தமிழரின் வடகிழக்கு இணைந்த தேச சிந்தனை அடக்கி ஒடுக்கிட தம் இனவாத பொலிசாரை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதோடு நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுக் கொண்ட அதே பொலிசார் வடக்கில் அமைதி காத்தனர். இதுவரை காலமும் தெற்கிற்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதியா என கேட்ட எம்மையே வடக்கிற்கு ஒரு நீதி கிழக்கிற்கு ஒரு நீதியா? என கேட்க வைத்துள்ளனர்.
சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் இலங்கையில் இருக்கும் போதே இனவாத அரசின் கைக்கூலிகளான பொலிசார் கிழக்கில் தாக்குதலை மேற்கொண்டு கிழக்கை வடக்கோடு இணைய விடமாட்டோம் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு கூறி உள்ளனர்.
கடந்த வருடம் திலீபனின் நினைவூர்தி கிழக்கில் பொத்துவில்லில் இருந்து வடக்கை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தபோது கிழக்கில் பல இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சித்ததோடு திருகோண மலையில் சிங்கள குடியேற்ற கிராமத்தில் வைத்து ஊர்தியையும் அதனோடு பயணித்தவர்களையும் தாக்கினர். இதற்கு பின்னால் பொலிசார் இருந்தனர் என்பதே எமது கணிப்பீடு. இதனை தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரின் முட்டாள்தனமான செயற்பாடு என கருத்து கூறி மகிழ்ந்தவர்கள் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி கொடுத்தவர்களை தாக்கியமையை யார் மீது குற்றம் சுமத்தி மகிழ போகின்றார்கள்? கஞ்சியின் மீதா? அல்லது கஞ்சி பகிர்ந்தவர்கள் மீதா? பொத்துவில் என்பது எமது தேசத்தின் அடையாளம். அன்று அத்தேச சிந்தனையுடனான பயணத்திற்கே பேரினவாதம் தாக்குதல் மேற்கொண்டது. இன்றும் அச்சிந்தனைக்கே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றே நாம் ஊகித்துணரல் வேண்டும்.
இம்முறை கிழக்கில் போன்று வடக்கிலும் பொலூசாரின் கெடுபிடி இருக்கும் என நினைத்தபோதும் நினைவேந்தல் வார ஆரம்பத்திலிருந்து இறுதி நாள் வரை அமைதியே நிலவியது. இறுதி 18ஆம் திகதியும் முள்ளிவாய்க்கால் சுற்று வட்டாரத்திலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பொலிசாரையோ இராணுவத்தினரையோ ன சீருடையில் காணக் கிடைக்கவில்லை. இது பேரினவாதத்தின் திட்டமிட்ட அரசியலாகும்.
அதுமட்டுமல்ல நினைவேந்தல் நடத்தலாம் என ஜனாதிபதி அறிவித்த பின்னரும் கிழக்கில் நான்கு பேரை கைது செய்ததை கண்டித்து பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் நாம் நடத்திய போராட்டத்தினைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரோடு நாம் நடத்திய பேச்சு வார்த்தையில் அவர் நினைவேந்தலை நடத்தலாம் என உறுதிமொழி வழங்கிய பின்னரும் கிழக்கில் மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பொலிஸ்மா அதிபரின் கீழ் கிழக்கின்படி சார் இல்லையா என் கேள்விக்கு அப்பால் இந்த தாக்குதல் ரணிலின் நரி தந்திர அரசியல் என்று குறிப்பிட வேண்டும்.
வடகிழக்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை தேச சிந்தனையை எதிர்ப்பவர்கள் தாயகம் காக்கும் போராட்டத்தை எள்ளி நகையாடியோர் கொழும்பில் நினைவேந்தல் நடத்திய போது அதற்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கியதோடு எதிர்ப்பு தெரிவித்தவர்களை துரத்தியுள்ளனர். இது பேரினவாத அரசின் இன்னும் ஒரு அரசியல் நாடகமாகும்.
வடகிழக்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை, சமஸ்டி தீர்வை எதிர்ப்பவர்களும், 13 ஆம் திருத்தமே தமிழருக்கான அரசியல் தீர்வு என இந்தியாவிற்கு காவடி தூக்கிக் கொண்டு இருப்பவர்களும் நினைவேந்தலை செய்து,கஞ்சி பகிர்ந்து,கஞ்சி குடித்து வாக்கு வேட்டைக்கு களம் அமைத்துக் கொண்டனர். இவர்களின் துரோகத்தை தமிழ் மக்கள் அறிவார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 15 ஆம் ஆண்டில் தமிழ் தேசம் எனும் உணர்விலிருந்து கிழக்கின் மக்களை பிரிக்கவும் அரசியலுக்கு தூரமாக்கி அவர்களை மௌனிக்க செய்யவும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் எதிர்வரும் காலத்தில் வன்னியையும் யாழ் தீபகற்பத்தையும் பிரிப்பதற்கு திட்டம் வகுக்கலாம். இதனை முறியடித்தல் வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது துயர் பகிரும் இடம் மட்டுமல்ல. அது எமது அரசியலுக்கான தியாகத்தின் இடமாகும். அத்தோடு நடந்தது இனப்படுகொலை என சர்வதேசத்துக்கு மீண்டும் மீண்டும் கூறவும் போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான மக்கள் குரலின் அடையாள இடமாகவும் நம் கொள்ளல் வேண்டும். மேலும் அரசியல் தீர்வாக 13ஆம் திருத்தத்தினை ஏற்க மாட்டோம் என 1987ம் ஆண்டே உணர்த்திய தை மீண்டும அடித்து கூறும் இடமுமாகும். தமிழ் மக்கள் விரும்பாத எந்த ஒரு தீர்வையோ நாம் ஏக்கப் போவதில்லை என்பதை சர்வதேசத்துக்கு உரத்துக் கூறும் இடமுமாகும். இதனை கொச்சைப்படுத்துவோர் தமிழின துரோகிகள் பட்டியலிலேயே சேர்கப்படுவர். கிழக்கும் வடக்கும் இணைந்த தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என தமிழ் தேசிய கொள்கையாளர்களும் அரசியல்வாதிகளும் உணராவிடின் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் துண்டாடப்படும் என்பதை உணர்வோம்.