தமிழ் தேசியத்தின் பெயரால் ஊழல் செய்து வந்தவர்களை நிராகரித்து உண்மையான மாற்றத்திற்காக நம்பிக்கையுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளரும், வேட்பாளருமான நிரோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் காரணமாக பாதிக்கப்படட வன்னியை கட்டியெழுப்ப மக்கள் எமக்கு ஆணை வழங்க வேண்டும். வன்னியின் பொருளாதார வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட வேண்டும். இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை அதன் மூலம் வழங்குவதுடன் வவுனியாவை தொழிற்துறை மையமாக மாற்ற வேண்டும். அதற்கான ஆணையையே நாம் கோருகின்றோம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தேசியத்தின் பெயரால் ஊழல் செய்து வந்தவர்களை நிராகரித்து உண்மையான மாற்றத்திற்காக நம்பிக்கையுடன் மக்கள் எம்முடன் கைகோர்த்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 3 தமிழ் பிரதிநிதித்துவத்தினை எம் மண்ணுக்கு பெற முடியும் எனத் தெரிவித்தார்.