தமிழ்த்தேசியம் சார்ந்த அனைவருமே மக்களை சிந்திக்கவிடாத அரசியலினைச்செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ளபோது அவர்கள் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர் என்று தமிழர்விடுதலைக்கூட்டணியின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளர் சந்திரகுமார் கண்ணன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
நான் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் தமிழர்விடுதலைக்கூட்டணியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.
அரசியலுக்கு வருகின்ற அனைவருமே சொல்கிறார்கள் மக்களுக்கு சேவை செய்யப்போகின்றோம் என்று.
ஆனால் என்னை பொறுத்தவரை கடந்த 14 வருடங்களாக வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடக்கம் அன்றாட பிரச்சனைகள் வரை நன்கு அறிந்தவன் நான்.
அந்த வகையில் தொடர்ச்சியாக எனது சேவையினை அவர்களுக்காக செய்திருக்கின்றேன்.
அதன் அடிப்படையில் அந்த சேவையின் பலனாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே எனது சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் இந்த தேர்தலில் இறங்கியிருக்கின்றேன்.
இங்கு தமிழ்த்தேசியம் சார்ந்த அனைவருமே மக்களை சிந்திக்கவிடாத அரசியலினைச்செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உளன்றுகொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்களோ பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதுவே அவர்களது அரசியலாக உள்ளது.
நாங்கள் அப்படியல்ல எனவே மக்களே சிந்தியுங்கள் இவருக்கு வாக்கினை போடலாமா என்று பலமுறை சிந்தியுங்கள்.மாற்றம் என்பது மக்கள் மத்தியில் இருந்தே வரவேண்டும். தொடர்ச்சியாக ஒருவரை தெரிவுசெய்துவிட்டு ஒன்றும் மாறவில்லை என்று சொல்வதும் முறையல்ல. எனவே மக்களது சிந்தனை மாறவேண்டும் அதன்போதே அவர்களது வாழ்க்கையும் மாறும்.என்றார்.