எதிர்வரும் தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட இளைஞர்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கி உரிமைக்குரலை வலுப்படுத்துமாறு வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில் நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலானது தமிழ்மக்களை பொறுத்தவரை சவாலான ஒரு நிலையினை ஏற்ப்படுத்தியுள்ளது. குறிப்பாக இம்முறை வன்னிமாவட்டத்தில் 6பேரை தெரிவுசெய்வதற்காக 423 பேர் களத்தில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் எமது மக்களின் வாக்குகள் என்றுமில்லாத வகையில் சிதறடிக்கப்படக்கூடிய ஒரு நிலமை காணப்படுகின்றது.
எனவே வன்னிமக்கள் வெற்றுவாக்குறுதிகளுக்காக ஏமாறாமல், போலிப்பிரச்சாரங்களுக்கு மயங்காமல் வேட்பாளர்களின் கடந்தகாலங்கள் தொடர்பாகவும் அவர்களது கொள்கை நிலைப்பாடு தொடர்பிலும் நன்கு அறிந்துவாக்களிக்கவேண்டும்.
குறிப்பாக வாக்குகளை வீணடிக்காது,மக்களின் குரலாக பரிணமிக்க கூடியவர்களை அதிலும் குறிப்பாக இளைஞர்களை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பில் அக்கறை செலுத்தவேண்டும்.
வன்னிமாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்த்தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்டு தடம் மாறாமல் பயணிக்கின்ற இளைஞர்கள் பலர் உள்ளனர். எதிர்காலத்தை மாற்றியமைப்பதற்கான ஆற்றலும் ஆளுமையும் எமது இளைஞர்களிடம் நிறையவே இருக்கிறது. ஆயினும் அவர்களுக்கான வாய்ப்புக்களை மக்கள் இதுவரை வழங்கியிருக்கவில்லை.
எனவே கடந்துபோன அரசியல் ஒழுங்குநிலையை மாற்றி தமிழ்த்தேசிய எண்ணக்கருவோடு மக்கள் பணியாற்றுகின்ற இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள் வாக்குகளை இம்முறை வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். என்றார்