கனடாவில்(Canada)கடந்த வாரம் இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஒருவரை நிபந்தனை பிணையில் விடுவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் பிராம்டன் நகரில் இந்து மகா சபைக்கு சொந்தமான கோயில் ஒன்று உள்ளது.
குறித்த பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தாக்குதல் சம்பவம்
அத்துடன், இந்து மகா சபை கோவிலுக்கு சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்கினர்.
அதேநேரம், இதனை கண்டித்து இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு தெருக்களில் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 4 பேரை கைது செய்தனர்.
வழக்குப்பதிவு
அவர்களில், காலிஸ்தான் உறுப்பினரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு வேண்டப்பட்ட காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த இந்தர்ஜீத் கோசால் என்ற நபரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த 8 ஆம் திகதி கோசாலை கைது செய்தோம். ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிறகு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டான். ஒண்டாரியோ நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அவன் முன்னிலையாவான்” எனக் கூறியுள்ளனர்.