முல்லைத்தீவு – கரைதுறைப்று கல்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் கீழுள்ள ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளில் கால்நடைவளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் மேச்சல் தரவை இன்மையால் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் பகுதிகளுக்கு நேற்றையதினம் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அந்தவகையில் குறித்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதிகளில் 5000இற்கும் மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றபோதும், அந்த கால்நடைகளுக்குரிய மேச்சல் தரவையின்மையால் வருடந்தோறும் 50இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பதாக கால் நடைவளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் பல கால் நடைவளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை விற்பனை செய்கின்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேச்சல் தரவை தொடர்பான கோரிக்கைகளை உரிய தரப்புக்களிடம் பலதடவை முன்வைத்தும், இதுவரையில் அதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இந்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளிலுள்ள கால்நடைகளிலிருந்து நாளொன்றிற்கு 3000லீற்றர் க்கும் அதிகமான பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேச்சல் தரவை கிடைக்கப்பெறின் இதனைவிட அதிகளவிலான பாலுற்பத்தியைப் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் விவசாயிகள் நடாறுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரிவித்தனர்.
இந் நிலையில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் அனைவருக்குமே இந்த மேச்சல்தரவை இல்லாத பிரச்சினை இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
இவ்வாறு மேச்சல் தரவையில்லாத பிரச்சினையால் அதிகளவில் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுவதுடன், கால்நடைவளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை விற்பனைசெய்கின்ற இக்கட்டான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு பாலுற்பத்தியும் மந்தநிலையிலிருப்பதாக கால்நடைவளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் கால் நடைவளர்ப்பாளர்களின் இந்த பாதிப்பு நிலையுணர்ந்து அவர்களின் அத்தியாவசியத் தேவையாகவுள்ள மேச்சல் தரவை வழங்கப்படவேண்டும். மேச்சல் தரவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – என்றார்