கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (26.03.2025) மாலை 3 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் மாடுகளுக்கான தோடு குற்றுதல், கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல், மேய்ச்சல் தரை இன்மை, கால்நடை மருத்துவம், கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தல், கால்நடைகள் களவாடப்படுதலை இல்லாதொழித்தல், புதிய இன மாடுகளை அறிமுகப்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில தீர்வுகளும் வழங்கப்பட்டிருந்தது.
அத்தோடு கட்டாக்காலி மாடுகள் வீதியில் நிற்குமிடத்து 10,000 ரூபாய் தண்டப்பணமும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் கி.டென்சியா, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜெயந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு அரச கால்நடை வைத்தியர் எஸ்.நிகேதினி, கமநல சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், கால்நடை கூட்டுறவு சங்கத்தினர், கால்நடை வளர்ப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.