வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் வடமாகாணத்தில் 46,000ற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவப் பெண்தலமைத்துவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வடபகுதி மீனவக் குடும்பங்களின் இந்தியஇழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கடற்றொழில் அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் வலியுறுத்தியுள்ளார். தவறினால் வடபகுதி மீனவமக்கள் அரசிற்கெதிராக போராட்டத்தில் குதிப்பார்கள் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பாராளுமன்றில் 09.04.2025 இன்று இடம்பெற்ற பெறுமதி சேர் வரி தொடர்மான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பெறுமதிசேர் வரி தொடர்பிலான விவாதத்திலே கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி.
உணவுப்பொருட்களுக்கான வரி குறைக்கப்படவேண்டும். குறிப்பாக அரிசி, சீனி, மா, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின்மீதான வரி குறைக்கப்படவேண்டும்.
அதேவேளை எனது மாவட்டத்திலும், வடமாகாணத்திலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவுய் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாமென நினைக்கின்றேன்.
கிளீன் ஸ்ரீலங்க எனச் சொல்லப்படுகின்ற விடயத்திற்கு மாறாக வடக்கு மாகாணத்திலே சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளின் மோசமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
முன்னைய அரசாங்கங்களின் காலங்களிலும் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் தற்போதைய புதிய அரசாங்கத்தின் காலத்திலாவது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் குறைவடையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகளே சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல்போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கின்றார்களோ என நாம் எண்ணக்கூடியவாறிருக்கின்றது.
தற்போதைய மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் இலஞ்சம் பெற்று தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக மக்கள் தெரிக்கின்றனர்.
இவ்வாறானநிலை மாறவேண்டும். அதேவேளை முல்லைத்தீவைப் பொறுதனதவரையிலே கசிப்பு, கஞ்சா, ஐஸ், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களின் ஊடுவல்கள் அதிகரித்திருக்கின்றன.
அத்தோடு இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு யார் காரணம்.
இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் கரிசனையோடு செயற்படவேண்டும்.
இல்லாவிட்டால் அரசிற்கு எதிராக மக்கள் இறங்கிப் போராடவேண்டிய சூழல் ஏற்படும் என்பதைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். கூட்டுறவுப் பிரதிஅமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்கள் இச் சபையிலே இருக்கும்போதே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கடற்றொழில் மேற்கொள்ளும் மாவட்டங்களாக முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் காணப்படுகின்றன. இதனால் பெருமையடைகின்றோம்.
இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சமாசமும், 34மீனவகூட்டுறவுச்சங்கங்களும், 3,847மீனவக்குடும்பங்களைச்சேர்ந்த 4,642மீனவர்களும், 215 மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களும், 1,435பதிவிலுள்ள படகுகளும், 720பதிவில் இல்லாத படகுகளும் காணப்படுகின்றன.
மன்னார் மாவட்டத்தில் 15000ற்கும் அதிகமான மீனவக்குடும்பங்களும், மொத்தமாக 4,620படகுகளும், 5000ற்கும் அதிகமான மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களும் காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, கண்டாவளை, பளை ஆகிய மூன்று சமாசங்களில் 25மீனவக் கூட்டுறவுச்சங்கங்கள், மற்றும் 4,199 மீனவக் குடும்பங்களும், 5,194மீனவர்களும், 1,691மீன்பிடிப் படகுகளும், 482மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களும் காணப்படுகின்றன.
அதேபோன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் காணப்படுகின்றது. அவற்றில் மொத்தமாக 126 சங்கங்களும், 23,798 மீனவக் குடும்பங்களும் 28,110 மீனவர்களும், 9,169 மீன்பிடிப் படகுகளும், 5000ற்கும் அதிகமான மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களும் காணப்படுகின்றன.
இவ்வாறு இருக்கையில் எமது மீனவர்கள்படும் துயரங்கள் எண்ணிலடங்காதவை. குறிப்பாக இந்திய இழுவைப்படகுகளின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் மிகவும் மோசமான நிலைக்கு எமது மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லலாது சூழல்சார் பாதிப்பினையும் நாமும், எமது சமுத்திரமும் எதிர்கொள்கின்றோம். இதனால் கடல்சார் உற்பத்திகள் அற்றுப்போய் எமது மீனவமக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது. கடலில் மீன்கள் உற்பத்தியாகி அவை வளர்ச்சியடையும்முன்பே அந்தக் கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. அத்தோடு எமது மீனவர்கள் சுதந்திரமாக தங்களது தொழிலை மேற்கொள்ளமுடியாது தாக்கப்படுவதும்இ மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது.
அதுமட்டுமல்லாது சூழல்சார்ந்து கடலின் அடியில் காணப்படும் கடற்தாவரங்கள், பவளப்பாறைகள், கடல்சார் உயிரினங்களின் உற்பத்தி இடங்கள் அழிக்கப்படுகின்ற செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. இதனால் கடலையும், கரையையும் நம்பியுள்ள எமது மீனவ சமூகம் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றார்கள்.
எமது மீனவர்கள் சுதந்திரமாகச் செய்துவந்த பாரம்பரிய மீன்பிடித்தொழிலை செய்யவிடாமல் குறிப்பாக இலங்கையில் அங்கீகரிக்கப்படாத பதினெட்டுவகையான சட்டவிரோத மீன்பிடி முறைகள் தற்போது மிக அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் எமது பாரம்பரிய மீனவ நடவடிக்கைகள் அழிந்துபோகின்ற நிலமைகள் காணப்படுகின்றன. இதனால் எமது மீனவர்கள் மீன்பிடித்தொழிலைக் கைவிட்டுச் செல்கின்ற நிலமைகளும் காணப்படுகின்றன.
இவ்வாறான சட்டவிரோத தொழில்முறைகள் அதிகரித்தமைக்கு பொறுப்பற்ற கடந்தகால அரசும்இ அமைச்சும், அரசஅதிகாரிகள் சிலருமே காரணமாகும். இவர்கள் சட்டவிரோதமான தொழில்களுக்கு அனுமதிகளை வழங்கி சாதாரண மீனவர்களதும் நாட்டினது பொருளாதாரத்தையும், வளங்களையும் அழிவிற்கு இட்டுச்செல்ல உறுதுணையாக இருந்தார்கள் என்பதே உண்மை.
அபிவிருத்தி என்றபோர்வையில் கடற்கரையோரங்களில் இடம்பெறும் கனியமணல் அகழ்வு, மற்றும் பண்ணை வளர்ப்பு முறைகள் போன்றவற்றால் எமது மீனவர்கள் தங்களுடைய காணிகளை இழந்துவருகின்றனர். சூழல்பாதிப்புக்களையும் எதிர்கொள்கின்ற சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளது. இதனால் பலமீனவர்கள் தங்களது இறங்குதுறைகளையும் இழந்து தவிக்கின்றார்கள். பல நீர்வாழ் உயிரினங்கள் அழிந்துபோகின்றன.
மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன.
மீனவர்களின் கரவலைப்பாடுகள் இல்லாமல்போகின்றது. அதுமட்டுமல்ல சமூகச்சீர்கேடான விடயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவற்றைக் கண்டுகொள்ளாமல் மக்கள் நலன் சாராத இவ்வாறான திட்டங்கள் எமக்கு அவசியமானதா? என்பது சிந்திக்கவேண்டிய விடயம் – என்றார்.