அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப்பதவியை வழங்க அதிபர் ரணில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அதிபர் ரணில் மற்றும் ஆளும் கட்சி இடையே அண்மைய சில வாரங்களாக முக்கிய கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.
முக்கிய அமைச்சுப்பதவிகள் ரணில் வசம்
இந்தநிலையில், உரியமுறையில் செயற்படத் தவறிய, சில முக்கிய அமைச்சுப் பதவிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க மாற்றியமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.சுகாதார அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சு என்பன இதில் அடங்குமென தெரிவிக்கப்படுகிறது.
ரணில் -பசில் சந்திப்பு
முன்னதாக அதிபருக்கும், பசில் ராஜபக்ச தலைமையிலான சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் இடையிலான அண்மைய சந்திப்புகளில், புதிய அமைச்சுப் பதவிகளை பொதுஜன பெரமுன கோரியுள்ளது.
எனினும் தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார இன்னல்களுக்கு மத்தியில் செயற்படக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என அதிபர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.