பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இன்று வெளியாகியுள்ளது ‘மாமன்னன்’ திரைப்படம்.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜின் மூன்றாவது படைப்பாக மாமன்னன் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் (ஆதி வீரன்), வடிவேலு (மா மன்னன்), ஃபகத் ஃபாசில் (அழகம் பெருமாள்), கீர்த்தி சுரேஷ் (லீலா) ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கம், உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதையும் தாண்டி, நடிகர் வடிவேலுவின் கதாபாத்திர வடிவமைப்பே பெரும்பாலான சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
முன்னதாக படத்தின் இசை வெளியீட்டில், தேவர் மகனில் வரும் இசக்கி கதாபாத்திரமே, மாமன்னன் வடிவேலுவின் கதாபாத்திரமாக இருக்கும் என மாரி செல்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தன. இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ‘மாமன்னன்’ படம் குறித்த ஊடக விமர்சனங்களைப் பார்க்கலாம்
படத்தின் கதை
இந்த சமூகத்தில் ஆதிக்க சாதியினருக்கும், பட்டியலின மக்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளும்; தங்களுக்கான உரிமையை நிலை நிறுத்துவதற்கு ஒடுக்கப்படுபவர்கள் செய்யும் போராட்டமும் தான் படத்தின் ஒன்-லைனாக இருக்கிறது.
சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக ஃபகத் ஃபாசிலும், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.,வாக வடிவேலும் இருக்கிறார்கள். வடிவேலுவின் மகன் உதயநிதி. உதயநிதியின் காதலியாக கீர்த்தி சுரேஷ்.
ஃபகத் ஃபாசில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராகவும், வடிவேலு பட்டியலினத்தைச் சேர்ந்தவராகவும் நடித்துள்ளனர்.
உதயநிதிக்கு சொந்தமான இடத்தில் கீர்த்தி சுரேஷ் இலவச கல்வி மையம் ஒன்றை நடத்துகிறார். அதற்கு ஃபகத்தின் அண்ணனாக வரும் சுனில் இடையூறு செய்யவே, பஞ்சாயத்து பேசுவதற்குச் செல்கிறார் வடிவேலு.
அங்கே வடிவேலு அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் உதயநிதிக்கும், ஃபகத்துக்கும் மோதல் நிகழ, கட்சிக்குள் பெரும் பிரச்னையாக உருவெடுக்கிறது. இதனால் வேறு கட்சியில் தன்னை இணைத்துக்கொள்கிறார் ஃபகத்.
அடுத்ததாக தேர்தல் வருகிறது, அதில் வடிவேலு ச.ச.ம.க.,வின் வேட்பாளராகக் களம் இறங்குகிறார். அவருக்கு எதிராக எதிர்த்தரப்பில் வியூகம் வகுக்கப்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா மாமன்னன்?
மாமன்னன், சினிமா, அரசியல், சாதி
பட மூலாதாரம்,RED GIANT MOVIES
”திரைக்கு வரும் முன்பே பெரும் பிரளயத்தைக் கிளப்பிவிட்ட மாமன்னன் படத்தின் வசனங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளுக்கு ஒத்தடம் கொடுக்கின்றன” என்று இந்து தமிழ் கூறியுள்ளது.
இந்தப் படம் குறித்து இந்து தமிழ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “தனது முந்தைய படங்களில் கையாண்ட அதே ரூட்டை அப்படியே பின்பற்றி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதிரடியாகத் தொடங்கும் படத்தின் முதல் பாதியே இரண்டாம் பாதி எப்படி முடியும் என்பதையும் சொல்லிவிடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
காட்சியமைப்புகள் எப்படி இருக்கின்றன?
’மாரி செல்வராஜின் படங்களில் எப்படியான காட்சிகள் இடம்பெறுமோ, அதன் அத்தனை அம்சங்களையும் மாமன்னன் படத்தின் முதல் பாதியிலேயே நாம் காணலாம்’ என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
”ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள், அதிர்ச்சியூட்டும் காட்சிகள், குற்ற உணர்வு, மென்மையான காதல், மனிதாபிமானமற்ற வில்லத்தனம் போன்ற காட்சிகளைச் சித்தரிப்பதில் இயக்குநர் நம்மை ஏமாற்றவில்லை,” என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிடுகிறது.
”படத்தின் இரண்டாம் பாதியில் கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. காட்சிகள் தொய்வடைந்து செல்கிறது. கதை விறுவிறுப்படைய வேண்டும் என ரசிகர்கள் நினைக்கும் இடங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது” என இந்தியா டுடே தனது விமர்சனத்தில் குறிப்பிடுகிறது.
அதேபோல் படம் முழுவதும் நிறைய குறியீடுகள் வருகிறது எனவும், கதையின் பிரமாண்ட தருணங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் இந்தியா டுடே கூறுகிறது.
கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் நியாயம் செய்திருக்கிறார்களா?
”உதயநிதியை வைத்துப் படத்தை உருவாக்கி இருந்தாலும் அவரை ஓவர்டேக் செய்து ஃபகத்தும் வடிவேலுவும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்று நடிகர்களின் நடிப்பு திறன் குறித்து இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
கதாநாயகியாக வரும் கீர்த்தி சுரேஷுக்கு திறமையைக் காட்ட பெரிதாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
”இதுவரை நகைச்சுவை காட்சிகளில் கலாட்டா செய்யும் நடிகராக நாம் பார்த்த வடிவேலு, இந்தப் படத்தில் வேறொரு பரிணாமத்தை அடைந்திருக்கிறார். படம் முழுவதும் மிக அமைதியான, சீரியஸான கதாபாத்திரமாக அவர் வருகிறார்.
அதேபோல் தன் சாதியின்மீது பற்றுகொண்ட தன்முனைப்பான அரசியல்வாதியாகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஃபகத்” என இந்தியா டுடே பாராட்டியிருக்கிறது.
மாரி செல்வராஜ் வெற்றி பெற்றாரா?
படத்திற்குப் பெரும் பலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அமைந்துள்ளது என இந்து தமிழ் கூறுகிறது.
“படத்துக்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட பாடல்கள் கேமரா கண்களுக்குள்ளும் ஜொலிக்கின்றன.
மேலும், வடிவேலு – உதயநிதி – மாரி செல்வராஜ் கூட்டணிக்கு மகுடம் சேர்த்திருக்கிறது இந்த மாமன்னன்” என்று இந்து தமிழ் பாராட்டியிருக்கிறது.
அதேபோல், “தன்னுடைய இந்த மூன்றாவது படத்தின் மூலம் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் மாரி செல்வராஜ் இணைந்திருக்கிறார்” என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
“முதல் இரண்டு படங்களோடு ஒப்பிடும்போது, மாமன்னன் படத்தின் கதை பலவீனமாகவே உள்ளது. ஆனாலும் மாரி செல்வராஜ் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நம்பிக்கைக்குரிய திரைப்பட இயக்குநராக இருப்பார், அவருடைய திறமையை யாராலும் மறுக்க முடியாது,” என்று இந்தியா டுடே கூறியுள்ளது.