உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை. எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.

இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட வாக்குகள் அதிகமாக பெற்று அநுர குமார திஸாநாயக வெற்றிபெற்றுள்ளார்.

அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 5,634,915 ஆகும். 42.31 சதவீதமாக அவரது வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்றுள்ளார். 32.76 சதவீதமாக அவரது வாக்குகள் பதிவாகியுள்ளன.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 வீதத்தை தாண்டியிருக்கவில்லை.

எனினும் இரண்டாவது, மூன்றாவது வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற வகையில் அனுரகுமார வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை அவரது பதவியேற்பு வைபவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

முதலாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதல் சுற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார்.

இதுவரையில் மொத்தம் 5,634,915 (ஐம்பத்து ஆறு இலட்சத்து முப்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து பதினைந்து) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். 42.31 சதவீத வாக்குகளை இவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

முதல் சுற்று முடிவுகள்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஜித ்பிரேமதாச 4,363,035(நாற்பத்து மூன்று இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து முப்பத்தைந்து) வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். 32.76 சதவீத வாக்குகளை சஜித் பிரேமதாச பெற்றுக் கொண்டுள்ளார்.

மூன்றாவது இடத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளதுடன் இதுவரையில் அவர் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 2,299,767 ஆகும். 17.27 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும், 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாதுள்ளது.

எனவே இரண்டாம் விருப்பத் தேர்வு வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Latest news

Related news