யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna நேற்று (10.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கில் சுதந்திரமானதும் அமைதியானதுமாகச் சூழல் ஒன்றை ஏற்படுத்தத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வடக்கு முழுவதும் உலா வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் தற்போதைய தேர்தல் காலத்தில் இங்கு தலைகாட்டவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் குறித்த இருவரில் ஒருவரே வெற்றிபெறுவார் என்ற செய்தியினையே வடக்கு மக்கள் வழங்கியிருந்தனர். எனினும், வடக்கிலுள்ள மக்கள் தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை வெளிப்படுத்துவதாக வடக்கிலுள்ள முக்கிய தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்
எனவே, பழைய தலைவர்கள் பேருந்தைத் தவறவிட்டுள்ளனர், பேருந்தைத் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் பேருந்தில் இடமளிக்கப்படமாட்டாது.
அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பரம்பரை காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும். அதேநேரம், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம். அத்துடன், போதைப்பொருளின் பிடியில் சிக்கியுள்ள வடக்கினை முழுமையாக அதிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
அதேநேரம், யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து, தங்களது அறிவினாலும், செல்வங்களாலும் வடக்கினை கட்டியெழுப்ப வேண்டும். தற்போது, அதற்கான சிறந்த காலம் உதயமாகியுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.