வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகனநெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதானவீதியின் வயல்வெளிகரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும் இவ்வாறான ஒருவகைபாக்கு விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றது.
குறித்த வியாபாரநிலையங்களிற்கு வருகைதரும் இளைஞர்கள் தமது வாகனங்களை பிரதான வீதிகளை அண்டி நிறுத்துவதால் அந்த பகுதிகளால் பயணம் செய்யும் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருகின்றனர்.
பிரதானவீதி மற்றும் சந்தை அமைந்துள்ள பகுதிகளானது அதிகமான வாகனங்கள் சென்றுவருகின்ற ஒரு வீதியாக காணப்படுகின்றது. இந்நிலமையில் அங்கு பாக்கினை கொள்வனவு செய்யவரும் இளைஞர்களின் செயற்பாடுகளல் வாகனநெரிசல் ஏற்ப்பட்டுவருவதுடன் அடிக்கடி விபத்துசம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றது. எனவே குறித்த விடயம் தொடர்பாக பொலிசார் உடன்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த பாக்குவிற்பனை நிலையங்களில் மாவாஎன்ற ஒருவகை போதைப்பாக்கு விற்பனை இடம்பெறுவதாக தெரிவித்து கடந்தகாலங்களில் வவுனியா பொலிசாரால் சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.